திருச்சி அருகே திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய பேராசிரியர் கைது

திருச்சி அருகே திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-19 19:12 GMT

திருச்சி அருகே திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

பேராசிரியர்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ரமேஷ் (வயது 38). இவர் அண்ணா பல்கலைக்கழகம் ராமநாதபுரம் கிளையில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதனால் அவர் வரன்தேடி திருமண தகவல் மையத்தில் தனது பெயர், முகவரி விவரங்களுடன் பதிவு செய்து இருந்தார். இதைத்தொடர்ந்து திருமண தகவல் மையம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்.இ. படித்த பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அப்போது, அந்த பெண் தான் மத்திய அரசு பணியில் இருப்பதாக கூறி உள்ளார். தொடர்ந்து செல்போன் எண்களை பகிர்ந்து கொண்ட இருவரும் மனம்விட்டு பேசி உள்ளனர்.

உல்லாசம்

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 6 மாதமாக பழகி வந்துள்ளனர். மேலும் சென்னை எழும்பூரில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் மத்திய அரசு பணியில் இல்லை என்பதும், அவர் தன்னை ஏமாற்றி உள்ளார் எனவும் ரமேஷுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ரமேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார்.

அதுமட்டுமின்றி, என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் 100 பவுன் நகை மற்றும் கார் வேண்டும் என்றும், இல்லையென்றால் என்னை திருமணம் செய்ய உனக்கு தகுதியில்லை என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் சென்னையில் இருந்தபோது, தன்னிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றியதாக அந்த பெண் சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் கொடுத்தார். அப்போது, இருவரும் சமாதானம் செய்து கொள்ளலாம் என கூறி ரமேஷ் அந்த பெண்ணை கடந்த 13-ந் தேதி திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது, நடந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ரமேஷ் அந்த பெண்ணை தாக்கியதோடு என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு தகுதி இல்லை என திட்டினாராம்.

கைது

இது குறித்து அந்த பெண் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்