தாரை, தப்பட்டை முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பழனி, வடமதுரை பகுதிகளில் தாரை தப்பட்டை முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

Update: 2023-09-20 19:45 GMT

பழனியில் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 18-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பழனியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்றது. அவ்வாறு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சண்முகநதியில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதன்படி இந்து சக்தி சங்கமம் சார்பில், நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. முன்னதாக விநாயகர் சிலைகள் அனைத்தும் வாகனங்களில் அடிவாரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து திருஆவினன்குடி, பஸ்நிலையம், காந்திரோடு, தேரடி, காரமடை வழியாக சண்முகநதிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிலைகள் அனைத்தும் சண்முகநதியில் கரைக்கப்பட்டது. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலம் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதேபோல் இடையக்கோட்டையில், ஊர் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. நேற்று மாலை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து நங்காஞ்சியாற்றில் கரைத்தனர். இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாரை, தப்பட்டை முழங்க...

இதேபோல் அய்யலூர் மற்றும் வடமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 33 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. இதற்காக சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு அய்யலூருக்கு கொண்டு வரப்பட்டன.

தாரை, தப்பட்டை முழங்க பெண்கள், இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. முளைப்பாரியுடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை வழியாக வடமதுரையை வந்தடைந்தது. பின்னர் அங்கு, இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வடமதுரை அருகே உள்ள நரிப்பாறை குவாரி குளத்தில் கரைத்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்