தறிகெட்டு ஓடிய தனியார் பஸ், கார்-ஆட்டோ, பஸ் மீது மோதியது

நெல்லை கொக்கிரகுளத்தில் தறிகெட்டு ஓடிய தனியார் பஸ், நின்று கொண்டிருந்த அரசு பஸ், கார், ஆட்டோ மீது மோதியதில் பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-20 20:28 GMT

நெல்லை கொக்கிரகுளத்தில் தறிகெட்டு ஓடிய தனியார் பஸ், நின்று கொண்டிருந்த அரசு பஸ், கார், ஆட்டோ மீது மோதியதில் பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

தனியார் பஸ்

நெல்லை கொக்கிரகுளம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மதியம் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை சிக்னலில் பொருட்காட்சி திடல் செல்லும் அரசு பஸ் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதன் பின்னால் ஆட்டோ ஒன்று நின்றது.

அப்போது வண்ணார்பேட்டையில் இருந்து பேட்டை நோக்கி தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது. அந்த பஸ் வேகத்தடையை தாண்டி சென்றபோது தறிக்கெட்டு ஓடி, முன்னால் நின்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த ஆட்டோ முன்னால் நின்று கொண்டு இருந்த அரசு பஸ் மீதும், அருகே நின்ற கார் மீதும் மோதியது. இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

10 பேர் காயம்

இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் இருந்த பத்தமடையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகூர்மீரான் (வயது 54), பீர்முகமது (59), ராஜபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் (37) மற்றும் தனியார் பஸ்சில் இருந்த சுத்தமல்லியை சேர்ந்த கோமதி (55), மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த சண்முககுமார் (45), குறிச்சியை சேர்ந்த பேச்சியம்மாள் (40), சுத்தமல்லி காந்திநகரை சேர்ந்த ராஜேஸ்வரி (40), புளியங்குடியை சேர்ந்த பரமசிவன் (65) உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் கவுரி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் தனியார் பஸ் டிரைவரான அம்பை தாலுகா முக்கூடல் அருகே உள்ள கபாலிபாறையை சேர்ந்த அப்துல்ரகுமான் (31) என்பவருக்கு காயம் ஏற்பட்டதாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் வண்ணார்பேட்டையில் இருந்து கொக்கிரகுளம் வரை சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்