கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்

கோவில்கள் முன் டயர்களை தீவைத்து எரித்த வழக்கில் கைதாகி கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடியவர் ஒரு ஆண்டுக்கு பிறகு சிக்கினார்.

Update: 2023-04-23 18:45 GMT

கோவில்கள் முன் டயர்களை தீவைத்து எரித்த வழக்கில் கைதாகி கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடியவர் ஒரு ஆண்டுக்கு பிறகு சிக்கினார்.

டயர்களை எரித்த வழக்கு

கோவை டவுன்ஹால் என்.எச்.சாலை ஐந்து முக்கு மாகாளியம்மன் கோவில், ரெயில்நிலையம் முன் உள்ள சிறிய விநாயகர் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் உள்ள விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்களின் முன்பு மர்ம ஆசாமி ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி டயர்களை போட்டு தீ வைத்து எரித்தார்.

இதுதொடர்பாக பெரியகடை வீதி, உக்கடம், ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் 12 தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அடையாளம் தெரிந்தது

அதில் என்.எச். ரோடு மாகாளியம்மன் கோவில் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், ஒரு ஆசாமி பழைய டயர்க ளை கோவில் முன்பு போட்டு தீ வைத்து எரிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தீ வைத்தது சேலம் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 50) என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து சேலத்தில் பதுங்கி இருந்த கஜேந்திரனை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கஜேந்திரன் மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தப்பி ஓட்டம்

சிறையில் இருந்த அவருக்கு கடந்த ஆண்டு ஜனவாி மாதம் 27-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கஜேந்திரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் அனும திக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருந்த கஜேந்திரன், ஜனவரி 28-ந் தேதி இரவு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனால் அங்கு காவலில் இருந்த போலீசார் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை வலைவீசி தேடி வந்தனர்.

கைது

கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த கஜேந்திரன் சேலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று கஜேந்திரனை மடக்கி பிடித்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்