புதர் சூழ்ந்து இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்

வால்பாறை அருேக ஆரம்ப சுகாதார நிலையத்தை புதர் சூழ்ந்து உள்ளது. அங்கு விஷ பூச்சிகள் அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர்.

Update: 2022-10-03 18:45 GMT

வால்பாறை

வால்பாறை அருேக ஆரம்ப சுகாதார நிலையத்தை புதர் சூழ்ந்து உள்ளது. அங்கு விஷ பூச்சிகள் அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

வால்பாறை தாலுகாவில் வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையமானது, பஜார் பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது தேயிலை தோட்டம் மற்றும் புதர் நிறைந்த பகுதியில் செயல்படுகிறது. இதன் காரணமாக அங்கு வனவிலங்குகள், விஷ பூச்சிகள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து முடீஸ் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுவதை காணலாம்.

இடமாற்றம் செய்ய வேண்டும்

ேதாட்ட தொழிலாளி சாரதா:-

கருத்தரித்த நாள் முதல் பிரசவம் வரை தொடர் சிகிச்சை பெறுவதற்கும், அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெறுவதற்கும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று வருகின்றனர். எஸ்டேட் பகுதி பெண்களை தவிர மலைவாழ் கிராமங்களை சேர்ந்த பெண்களும் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ்களில் செல்வதற்கு வசதி கிடையாது. குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வாகனங்கள் செல்லும், அதன்பின்னர் நடந்து தான் செல்ல வேண்டும். எனவே முடீஸ் பஜார் பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.

ஆய்வு செய்யவில்லை

முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை:-

முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அதிகளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் தினமும் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி முடீஸ் பஜார் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசின் சார்பில் தமிழக சுகாதார துறையின் மூலம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்ய கூட யாரும் வருவதில்லை.

விஷ பூச்சிகள்

டீக்கடைக்காரர் ராஜூ:-

எந்த நேரத்தில் காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள், பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் வரும் என்று சொல்ல முடியாத இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இல்லாமல் 15 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. சிகிச்சைக்காக செல்பவர்களுக்கு மட்டுமன்றி அங்கு பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் ஆரம்ப சுகாதார நிலையத்தை முடீஸ் பஜார் பகுதிக்கு மாற்ற வேண்டும்.

இடம் ஒதுக்கீடு

இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகத்தினர் கூறும்போது, முடீஸ் பஜாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில், அதற்கு ஏற்ற வசதியில்லை என்று சுகாதார துறையினர் கூறுகின்றனர். எனவே புதிய இடம் தேவை என்றால் ஏற்கனவே வழங்கிய இடத்தை மீண்டும் எஸ்டேட் நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தால் புதிய இடம் வழங்குவது குறித்து எஸ்டேட் நிர்வாகம் உரிய முடிவெடுக்கும். ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் காலம் கடத்தி வருகின்றனர் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்