ஊட்டி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேரிலேண்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டு இருந்தார். தொடர்ந்து பயிற்சி எடுத்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு 2 தங்கம், 1 வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு, சர்வதேச அளவில் மலேசியா, சீனா, பிரானஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால் குடும்ப வறுமையால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார். மேலும் தைலம் காய்ச்சம் கூலி வேலைக்கு சென்று, குடும்பத்தை நடத்தி வருகிறார். வறுமையால் அவரது திறமையை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பிரபாகரன் கூறும்போது, சர்வதேச அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் வெளியூர்களில் நடைபெறும் போட்டிகளில் கூட பங்கேற்க முடியாத அளவிற்கு பண கஷ்டம் உள்ளது. தற்போது கூட பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பணம் இல்லாததால் செல்ல முடியவில்லை. எனவே தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவி வழங்க முன்வர வேண்டும். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.