நீரின் தரத்தை பரிசோதனை செய்ய கையடக்க கருவி

மீன் வளர்ப்பு குளங்களில் உள்ள நீரின் தரத்தை பரிசோதனை செய்ய கையடக்க கருவியை நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

Update: 2022-08-17 18:31 GMT

நாகப்பட்டினம்:

மீன் வளர்ப்பு குளங்களில் உள்ள நீரின் தரத்தை பரிசோதனை செய்ய கையடக்க கருவியை நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

நீரின் தரத்தை பரிசோதனை செய்ய கருவி

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மீன்வள பொறியியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கேசவன் மற்றும் ராமர் ஆகிய இருவரும் இணைந்து 'கையடக்க நீர் தர பரிசோதனை கருவி'அல்லது 'சிறியவகை கலரிமீட்டரை' என்றழைக்கப்படும் இந்த கருவியை உருவாக்கியுள்ளனர்.இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரின் தர மேலாண்மை

மீன்வளர்ப்பு தொழிலை நிலையாகவும், லாபகரமாகவும் நடத்துவதற்கு நீரின் தர மேலாண்மை மிகவும் முக்கியம். நீரின் பிஎச்(pH) அளவினை துல்லியமாக கணிப்பது அவசியமானதாகும், பிஎச்(pH) அளவில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட மீன்வளர்ப்பில் அதிக பங்கு வகிக்கும்.எங்களால் உருவாக்கப்பபட்டுள்ள இந்த கருவியின் மூலம் மிகவும் எளிதாக, சிக்கனமான முறையில் நீரின் பிஎச்(pH) அளவை துல்லியமாக மீன்குளங்கள் அமைந்துள்ள இடத்திலேயே கண்டறிய முடியும் என்று கல்லூரியின் அடிப்படை அறிவியல் துறை தலைவர் கேசவன் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முறை

மேலும் அவர்கள் கூறுகையில், மீன்வளர்ப்பு தொழில் புரிபவர்கள் இதுவரை ரசாயன கலவைகள் கொண்ட 'கிட்'களின் மூலமே நீரின் பிஎச்(pH), கரைந்துள்ள ஆக்சிஜன் மற்றும் நைட்ரேட் அளவுகளை பரிசோதித்து வருகின்றனர். ரசாயனங்களை நீரில் கலந்து அதனால் நீரில் ஏற்படும் நிற மாற்றத்தை குறிப்பு அட்டவணையுடன் ஒப்பிட்டு நீரின் தன்மையை அறிந்து வந்துள்ளனர்.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறிய வகை கலரி மீட்டரில் உள்ள டியூப்பில் மீன் குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீருடன், இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரசாயன கலவையை கலந்து இந்த கருவியில் வைப்பதன் மூலம் மிகவும் குறைந்த நேரத்தில் பிஎச்(pH) அளவுகளை தெரிந்துகொள்ள முடியும்.நிற குறியீடுகளை முன்னர் பயன்படுத்திய முறையில் வைத்து அளவீடு செய்யும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், இந்த புதிய கருவியில் அதை தவிர்த்து துல்லியமாக கனிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

நாகை மாவட்ட கிராமங்களில்....

இந்த கருவியின் மூலம் குளங்களின் நீர் தரத்தினை பரிசோதனை செய்யும் தொழில்நுட்பத்தை நாகை மாவட்டத்தில் உள்ள முட்டம், பனங்குடி, மஞ்சக்கொல்லை, வடகுடி, நாகை அக்கரைப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்படுத்த இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்காக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்