கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சாண்டலார்புரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56). இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வெள்ளைச்சாமி மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டிக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். கொடைரோடு அருகே பொட்டி செட்டிபட்டி பிரிவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்ற வெள்ளைச்சாமி, அங்கு தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளைச்சாமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.