தொழிற்பயிற்சி அளிக்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போக்சோ கைதி
தொழிற்பயிற்சி அளிக்க வந்த பெண்ணை போக்சோ கைதி பலாத்காரம் செய்ய முயன்றார்.
திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. தண்டனை கைதிகளுக்கு வெல்டிங், பிட்டர், டெய்லரிங் போன்ற பயிற்சிகள் அவர்கள் விருப்பத்தின் பேரில் அளிக்கப்படுகிறது. அதில், ஒரு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு பெண் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி வழக்கம்போல் பயிற்சி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். இந்தநிலையில் போக்சோ வழக்கில் கோவை மத்திய சிறையில் கைதியாக இருந்த 25 வாலிபர் ஒருவர், தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் உள்பட பயிற்சியில் ஈடுபட்டிருந்த கைதிகள் அனைவரும் மதிய உணவுக்காக சென்றனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பயிற்சி வகுப்புக்கு அனைவரும் வரவேண்டும். ஆனால், அந்த வாலிபர் மட்டும் மற்றவர்கள் வருவதற்கு முன் விரைவாக வகுப்பறைக்குள் வந்து, அங்கு தனியாக இருந்த பெண் பயிற்சியாளரின் வாயில் துணியை வைத்து அடைத்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயிற்சியாளர் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து அந்த வாலிபரை மிரட்டவே, அந்த வாலிபர் பயந்து அருகில் இருந்த கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அங்கிருந்து வெளியேறிய பெண் பயிற்சியாளர் நடந்த சம்பவத்தை சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கழிவறைக்குள் பதுங்கி இருந்த வாலிபரை சிறைகாவலர்கள் பிடித்து தனிமை சிறையில் அடைத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெண் பயிற்சியாளர் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தும் அதை சிறைத்துறை அதிகாரிகள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விசயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவரை சமரசம் செய்து அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
பயிற்சி அளிக்க வந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்காத தங்கள் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும் என்பதால் இந்த சம்பவத்தை சிறை அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண் பயிற்சியாளருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சம்பவத்தை வெளியில் கூறுவதாகவும் சிறைத்துறையில் பணியாற்றும் பெயர் கூற விரும்பாத காவலர்கள் தெரிவித்துள்ளனர்.