பெருந்துறை அருகே, தந்தையுடன் நீச்சல் பழகிய பிளஸ்-2 மாணவர் வாய்க்காலில் மூழ்கி பலி

பெருந்துறை அருகே தந்தையுடன் நீச்சல் பழகிய பிளஸ்-2 மாணவர் வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-17 21:23 GMT

பெருந்துறை

பெருந்துறை அருகே தந்தையுடன் நீச்சல் பழகிய பிளஸ்-2 மாணவர் வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீச்சல் பழக சென்றார்

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. டி.வி.மெக்கானிக். இவருக்கு சஞ்சய் (வயது 17) என்ற மகன் இருந்தார். இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று விடுமுறையையொட்டி சஞ்சய் வீட்டில் இருந்தார்.

அப்போது அவர் தனது தந்தையிடம் நீச்சல் பழக விரும்புவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெருந்துறை ஈரோடு ரோட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்றார்.

வாய்க்காலில் மூழ்கி சாவு

அதைத்தொடர்ந்து 2 பேரும் வாய்க்காலுக்குள் இறங்கினார்கள். பின்னர் சஞ்சய்க்கு தந்தை நீச்சல் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது சஞ்சய் திடீரென வாய்க்காலின் ஆழமான பகுதிக்குள் சென்றுவிட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்.

இதை பார்த்த திருமூர்த்தி, "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்"! என்று அபயகுரல் எழுப்பினார். சத்தம் கேட்டு அருகே குளித்து கொண்டிருந்தவர்கள் மற்றும் நீச்சல் தெரிந்தவர்கள் அங்கு சென்று சஞ்சயை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

சோகம்

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையுடன் நீச்சல் பழகிய பிளஸ்-2 மாணவர் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்