காவிரி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த பிளஸ்-2 மாணவர் போலீசில் சிக்கினார்

காவிரி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த பிளஸ்-2 மாணவர் போலீசில் சிக்கினார்

Update: 2023-03-28 19:51 GMT

திருச்சியில் காவிரி பாலத்தில் மோட்டார் சைக்கிளில்சாகசம் செய்த பிளஸ்-2 மாணவர் போலீசில் சிக்கினார். இளைஞர்களுக்கு அவர் மூலமாக வீடியோ வெளியிட்டு போலீசார் அறிவுரை வழங்கினர்.

மோட்டார் சைக்கிளில் சாகசம்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். திருச்சி காவிரி பாலம், கே.கே.நகரை அடுத்த ஓலையூர், மன்னார்புரம் முதல் டி.வி.எஸ்.டோல்கேட், திருச்சி-அரியலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்தநிலையில் திருச்சி காவிரி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட பிளஸ்-2 மாணவர் ஒருவரை கோட்டை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவருக்கு அபராதம் விதித்ததோடு, அந்த மாணவரை பேச வைத்து விழிப்புணர்வு வீடியோவும் வெளியிட்டனர். திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ வெளியிட்டு அறிவுரை

அந்த வீடியோவில் பேசிய மாணவர், "மோட்டார் சைக்கிள் சாகசத்தில் தெரியாமல் ஈடுபட்டு விட்டேன். இனி மேல் இவ்வாறு சாகசத்தில் ஈடுபட மாட்டேன். அவ்வாறு ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஆகவே இளைஞர்கள் யாரும் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட வேண்டாம்" என கூறி உள்ளார்.

மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்