விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்
கோனேரிகுப்பத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
மொத்தம் 279 பொது நலமனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைவாக தீர்வு காண உத்தரவிட்டார்.
மகன்கள்மீது நடவடிக்கை
திருப்பத்தூர் சாமநகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரபத்திரன் (வயது 55) என்பவர் கொடுத்த மனுவில், எனக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். எனக்கு சொந்தமான வீடு, நிலத்தை என் மகன்கள் என்னை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டனர். கடைசி காலத்தில் என்னை பராமரிக்க முடியாது எனக்கூறி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.
மாற்றுத்திறனாளியான நான் எங்கு செல்வது என தெரியாமல் உள்ளேன். ஆகவே, என் சொத்துக்களை மீட்டு தர வேண்டும். என்னை பராமரிக்காத என் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
விளையாட்டு மைதானம்
ஜோலார்பேட்டை ஒன்றியம், புள்ளானேரி ஊராட்சிக்கு உட்பட்ட கோனேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் பேர் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள். 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கபடி விளையாட்டில் பங்கேற்று வருகிறோம். மாவட்ட அளவிலும், மாநில அளவிலான கபடி போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்த ஆர்வமாக உள்ள எங்களுக்கு கபடி விளையாட்டுக்கான பயிற்சிகள் பெற போதிய விளையாட்டு மைதானம் இல்லை. எனவே, கோனேரிகுப்பம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விளையாட்டு மைதானம் அமைக்க ஆய்வு செய்து அதன்பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கருவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.