சென்னை புறநகர் பகுதிகளில் திட்டமிட்டு கைவரிசை; செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர கும்பலை சேர்ந்த 5 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் திட்டமிட்டு செல்போன்களை திருடிச்சென்று ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி விற்று வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டனர்.

Update: 2023-02-16 11:30 GMT

பல லட்சம் மதிப்பிலான செல்போன் பறிமுதல்

சென்னை அடுத்த பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று முன் தினம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தபோது, அவர் வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள ஐபோன் திருடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் சிக்னல் காட்டப்படுவதை கண்டறிந்த போலீசார், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அங்கு வந்த வாகனங்களை மடக்கி சோதனை செய்தபோது, ஒரு காரின் கதவில் உள்ளே மறைத்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பிலான ஐபோன் உள்ளிட 120 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

5 பேர் கைது

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 5 பேரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபு (வயது 25), கிருஷ்ணா (40), பவான் (19), பிரேம்குமார் (23),சதீஷ்(28) என்பது தெரியவந்தது. இவர்கள் பல ஆண்டு காலமாக, செல்போன் திருடுவதையே முக்கிய தொழிலாக செய்து வந்ததும், குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு வாரம் திட்டமிட்டு நூற்றுக்கணக்கான செல்போன்களை திருடிக் கொண்டு ஆந்திரா பகுதிகளுக்கு செல்வதும், அங்கு இருக்கும் ஏஜென்ட்கள் மூலம் அனைத்து செல்போன்களையும் விற்றுவிட்டு அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்