இரவு நேர ரோந்து பணிக்கு டிரோன் பயன்படுத்த திட்டம்

கோவையில் இரவு நேர ரோந்து பணிக்கு டிரோன் பயன்படுத்த திட்டம் உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-11-08 18:45 GMT


கோவை

கோவையில் இரவு நேர ரோந்து பணிக்கு டிரோன் பயன்படுத்த திட்டம் உள்ளதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.

டிரோன் இயக்க பயிற்சி

போலீசாருக்கு டிரோன்கள் இயக்குவது குறித்த பயிற்சி நேற்று கோவை 100 அடி சாலையில் நடைபெற்றது. இதற்கு துணை கமிஷனர் (தெற்கு) சிலம்பரசன் முன்னிலை வகித்தார்.

பயிற்சியை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை போன்ற நகரங்களில் கண்காணிப்பு பணிகளுக்கு டிரோன்களை பயன்படுத்தலாம்.

கோவை மாநகர போலீசில் 2 டிரோன்கள் உள்ளன. அதை இயக்க பயிற்சி பெற்ற போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே ஒரு போலீஸ் நிலையத் திற்கு ஒரு போலீசார் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இரவு நேர ரோந்து பணி

கோவையில் குற்றச்சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் குறுகலான இடங்கள், நீரோடைகளை ஒட்டியுள்ள இடங்களில் ரோந்து செல்வது சிரமமாக உள்ளது.

இதை தவிர்க்க இரவு நேர ரோந்து பணிக்கு டிரோன்கள் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

குறிப்பாக ரத்தினபுரி சங்கனூர் ஓடை, நொய்யல் ஆற்றை ஒட்டிய இடங்களில் டிரோன்கள் மூலம் இரவு நேரங்களில் கண் காணிக்கப்படும். இதற்கு தேவையான கருவிகள் டிரோன்களில் பொருத்தப்பட்டு இருக்கும்.

இதுதவிர கலவரம் நடைபெறும் காலங்களில் கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசுவதற்கும் டிரோன்கள் பயன்படுத் தப்படும். தற்போது துப்பாக்கி மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்படுகிறது.

இதில் சில பிரச்சினைகளை போலீசார் எதிர் கொள்கின்றனர். அதை தவிர்க்க டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசவும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கலவரக்காரர்களை அடையாளம் காண அவர்கள் மீது அழியாக மை அல்லது வர்ணங்கள் டிரோன்கள் மூலம் தெளிக்கப்படும்.

இதன்மூலம் அவர்களை எளிதாக அடையாளம் கண்டு கைது செய்ய முடியும்.

போக்குவரத்து கண்காணிப்பு

கோவையில் போக்குவரத்து கண்காணிப்பு பணியிலும் டிரோன்கள் ஈடுபடுத்தப்படும். மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் அதிகவேகமாக செல்பவர்களை தானாக அடையாளம் கண்டு வாகன எண்ணுடன், புகைப்படம் எடுக்கும் விதமாக டிரோன்கள் மேம்படுத்தப்படும்.

இதற்காக தனியார் தொழில்நுட்ப கல்லூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கோவையில் டிரோன்கள் பறக்கக்கூடிய இடங்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.

பச்சை நிறம் வகைப்படுத்தப்பட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க எவ்வித தடையும் இல்லை.

மஞ்சள் நிற வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீசாரின் அனுமதி பெற்று டிரோன்களை பயன்படுத்தலாம். சிவப்பு நிற வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டிரோன்கள் பயன்படுத்த எவ்வித அனுமதி கிடையது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்