சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற திட்டம் வகுக்க வேண்டும் - சீமான்

சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற திட்டம் வகுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2022-07-27 16:38 GMT

சென்னை,

நில வளத்தையும், நீர் வளத்தையும் கெடுக்கும் பண்புகளைக் கொண்ட சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரி தொடரப்பட்டப் பொது வழக்கொன்றில், விரைவாக அவற்றிற்கென செயல்திட்டத்தை வகுக்க வலியுறுத்தியும், யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். 'மரம் மண்ணின் வரம்; அதனை வளர்ப்பதே மனித அறம்' எனும் உயரியக் கோட்பாட்டுக்கேற்ப, மரம் வளர்ப்பைப் பெரிதும் ஊக்கப்படுத்தி, அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் நாளும் ஏற்படுத்தி வரும் வேளையில், மரங்களின் பண்புகளுக்கு நேர்மாறானக் குணங்களைக் கொண்டுள்ள யூகலிப்டஸ் மரம், சீமைக்கருவேல மரம் போன்ற அந்நிய மரங்களை இம்மண்ணிலிருந்து அகற்ற வேண்டியதும் பேரவசியமாகிறது.

நிலத்தடி நீர் வளத்தை உறிஞ்சி, காற்றிலுள்ள நீர்ச்சத்தையும் உறிஞ்சி, வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்ட மரங்களின் பேயான சீமைக்கருவேல மரமும், சமூகநலக்காடுகள் எனும் பெயரில் திணிக்கப்பட்ட யூகலிப்டஸ் மரமும் நில வளத்தையும், நீர் வளத்தையும் முற்றாகப் பாதிக்கிறது. வர்தா புயல் தாக்குதலின்போது சென்னையிலுள்ள பெருவாரியான மரங்கள் முறிந்து விழுந்ததற்குக் காரணமும், அவை இம்மண்ணுக்குத் தொடர்பற்ற அந்நிய மரங்கள் என்பதேயாகும். இம்மண்ணுக்கேற்ற மரங்களை நட்டு வளர்க்கும்போதுதான் பெருங்காற்றை எதிர்கொண்டாலும் அவை தாங்கும் திறனைக்கொண்டு, நிலைத்து நிற்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் மரங்கள் குறித்தான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, சீமைக்கருவேல மரங்களை மொத்தமாக அகற்றி, மண்ணுக்கேற்ற மரங்களையே நட்டு வளர்க்கிறார்கள்.

அம்மாநிலம் வளம் கொழிப்பதற்கும், இயற்கையின் பசுஞ்சோலையாகக் காட்சியளிப்பதற்கும் அம்மாநிலத்தை ஆளும் அரசுகளின் இயற்கை நலன் குறித்தானப் பெருத்த அக்கறையே முதன்மைக்காரணமாகும். மேலை நாடுகளில், மரங்களைப் பராமரிப்பதற்கென்றே 'மர மருத்துவர்கள்' எனும் ஒரு பிரிவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நில வளம், நீர் வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் என இயற்கையின் சொத்துக்கள் யாவற்றையும் சுரண்டிக்கொளுப்பதையும், சூறையாடித்தின்பதையும் நோக்கமாகக் கொண்ட இம்மண்ணின் ஆட்சியாளர்கள் அதுகுறித்த எந்தக்கவலையும், அக்கறையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது காலத்திற்கேற்ற சாலச்சிறந்த நடவடிக்கையாகும்; ஆக்கப்பூர்வமான பெரும் முன்னெடுப்பாகும்.

ஆகவே, தமிழக அரசானது இவ்விவகாரத்தில் சீரியக்கவனமெடுத்து, சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்கள் யாவற்றையும் அகற்றவும், தேக்கு, சவுக்கு, புளி, வேம்பு, நாவல், மூங்கில், பனை போன்ற இம்மண்ணுக்கேற்ற மரங்களை வளர்க்கவும் செயல்திட்டத்தை விரைந்து வகுக்க வேண்டுமெனவும், மக்களிடையே இதுகுறித்தான விழிப்புணர்வுப்பரப்புரையை முன்வைத்து, கேரள மாநிலத்தில் செயல்படுத்தியது போல, இதனை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்