நான்குவழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்

திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-12-12 18:45 GMT

பொறையாறு:

விழுப்புரம் முதல் நாகை வரை 180 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த நான்கு வழிச்சாலை கொள்ளிடத்தில் தொடங்கி தரங்கம்பாடி வரை செயல்படுத்தப்படுகிறது. திருக்கடையூர் அம்புபோடும் சாலையில் வெள்ளக்குளம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் நேற்று சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லாமேக், வசந்த ராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் சிம்சன் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சியினர் அங்கு வந்து, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகை அடிப்படையில் வைத்திருப்போருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நான்கு வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 9 பேரை கைது செய்தனர். அந்த வழியாக வந்த 100 நாள் வேலைக்கு சென்ற பெண்களை போராட்டம் செய்யப்போகிறார்கள் என்று நினைத்து போலீசார் தடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்