காதல் திருமணம் செய்த மருந்தாளுனர் தற்கொலை
குளச்சல் அருகே காதல் திருமணம் செய்த மருந்தாளுனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருகே காதல் திருமணம் செய்த மருந்தாளுனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
காதல் திருமணம்
குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). பிளம்பர். இவருடைய மனைவி சுஜிலா (28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 7 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.
சுஜிலா நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை செய்து வந்தார். தற்போது காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் ஆனந்த் மற்றும் சுஜிலா வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜிலா வீட்டில் உள்ள பொருட்கள் வைக்கும் அறையில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சுஜிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுஜிலா மன உளைச்சல் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இந்தநிலையில் சுஜிலா இறந்த பிறகும் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் ஒரு வாலிபர் கோபமாக பேசினார்.
இதுபோலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுஜிலா தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வேளை வாலிபரின் தொல்லையால் சுஜிலா தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.