இசை நிகழ்ச்சி குளறுபடி; ஏ.ஆர்.ரகுமான் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பதா? - சீமான் கண்டனம்

ஏ.ஆர்.ரகுமான் மீதான தனிப்பட்ட தாக்குதல் ஒருபோதும் ஏற்புடையதல்ல என சீமான் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-13 06:00 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது 'மறக்குமா நெஞ்சம்?' எனும் இசை நிகழ்ச்சி விழாவில் ஏற்பட்டக் குளறுபடிகளும், சிரமங்களும் வருத்தத்திற்குரியது.

இடங்களை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டக் குழப்பங்களினாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டதால் நேர்ந்த பாதிப்புகளினாலும் பொதுமக்கள் வெளிப்படுத்திய உள்ளக்குமுறல் மிக நியாயமானது. அதனை உணர்ந்தே சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் தார்மீக அடிப்படையில், நடந்தத் தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி வருந்தியிருக்கிறார்.

மேலும், இந்நிகழ்ச்சியைச் சரிவர காண இயலாது பாதிக்கப்பட்டதாக தெரிவித்தப் பார்வையாளர்களுக்கு அவர்களுக்குரிய நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது, சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது உள நேர்மையை வெளிப்படுத்துகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு பொது நிகழ்ச்சி குறித்தானத் திட்டமிடலையும், ஒழுங்கமைவையும் ஆழமாகக் கண்காணித்து, அதனை நெறிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும். ஏற்பாட்டாளர்கள் தவறு செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுக்கு முழு உரிமையுண்டு.

இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை, நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்களையும், அவர்களது செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறிய அரசுத்துறையைச் சேர்ந்தவர்களையும் விடுத்து, இசை நிகழ்ச்சி நடத்திய சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்கச் சொல்லி குற்றப்படுத்துவது சரியானதல்ல.

அந்நிகழ்ச்சியை நடத்திய ஏற்பாட்டாளர்களது நிர்வாகத்திறமையின்மையினாலும், அலட்சியத்தினாலும் விளைந்த துயருக்கு சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் மீது ஒரு சாரார் வன்மத்தைக் கட்டவிழ்த்துவிடுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்த நிகழ்வை வைத்து அவரது சமூக மதிப்பைக் கெடுக்கும் நோக்கோடு, பெரும் காழ்ப்புணர்ச்சி கொண்டு, சமூக வலைத்தளங்களில் நச்சுக்கருத்துகளைப் பரப்பி வருவது உள்நோக்கம் கொண்டதாகும்.

பன்னாட்டரங்கில் உலகப்புகழ் பெற்ற 'ஆஸ்கர்' விருதுகளை வாரிக் குவித்து, தாய்மொழி மீது கொண்ட அளப்பெரும் பற்றினால் தமிழிலேயே அம்மேடையில் பேசி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திட்ட சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் மீதானத் தனிப்பட்டத் தாக்குதல் ஒருபோதும் ஏற்புடையதல்ல.

தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் தமிழர்களின் பெருமிதத்திற்குரியப் பேராளுமையாவார்.

தனது அளப்பெரும் திறமையைக் கொண்டு பொருளீட்டி, புகழ்பெற்று, பெருவாழ்க்கை வாழுதலோடு நின்றுவிடாது, இனமான உணர்வும், சமூகப்பொறுப்புணர்ச்சியும் கொண்டு அதனை அறச்சீற்றமாக அவ்வப்போது வெளிப்படுத்தும் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களை மதரீதியாகச் சுருக்குவதும், தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிசெயலாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்