வெளிமாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்த பதுக்கியவர் கைது
நெமிலி அருகே வெளிமாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்த பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கு மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா அறிவுறுத்தலின் பேரில், வேலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் ஏட்டுகள் அருள், சந்திரன், விருமாண்டி ஆகியோர் ரேஷன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் தடுப்பது சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அன்வர்த்திகான் பேட்டை நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நரசிங்கபுரம் உடையார் தெருவில் வீட்டின் அருகில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும், அவரது வீட்டில் 21 மூட்டைகளில் சுமார் 1050 கிலோ தமிழக அரசால் வழங்கப்படும் பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
மேலும் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் உள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதை ஒப்புக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.