சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-23 08:16 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து குவைத் செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. கடலூரை சேர்ந்த நைமூர் ரகுமான் ஹபிபுல்லா (வயது 37) என்பவர் வேலைக்காக குவைத் நாட்டுக்கு செல்ல வந்து இருந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில் அவர், குவைத்துக்கு வேலைக்காக சென்றுவிட்டு அங்கே இருந்து ஏமன் நாட்டுக்கு சென்றுவந்தது தெரிந்தது.

இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏமன், லிபியா ஆகிய 2 நாடுகளுக்கு செல்ல கடந்த 2014-ம் ஆண்டு முதல் தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட இந்த 2 நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் சொல்லக்கூடாது. தடையை மீறி செல்பவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணை வெளியிட்டு உள்ளது.

குவைத்தில் பணியில் இருந்தபோது பணி நிமித்தமாக 2 முறை ஏமன் நாட்டுக்கு சென்று வந்ததாகவும், அது தடை செய்யப்பட்ட நாடு என தனக்கு தெரியாது எனவும் அவர் கூறினார். நைமூர் ரகுமான் ஹபிபுல்லா பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்