மளிகை கடையில் ரூ.50 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது
மளிகை கடையில் ரூ.50 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் சந்தோஷ் (வயது 26). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் ஜவகர்பஜாரை சேர்ந்த பழனியப்பன் (52) என்பவர் கடைக்கு வந்து ரூ.50 ஆயிரத்து 377-க்கு மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார். பின்னர் பழனியப்பன் தான் வாங்கிய பொருளுக்கான தொகையை காசோலையாக கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த காசோலையை ஆல்வின் சந்தோஷ் தனது வங்கி கணக்கில் செலுத்தியபோது, காசோலையில் பணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழனியப்பனை போனில் தொடர்பு கொண்டபோதும் அவர் எடுக்கவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆல்வின் சந்தோஷ் இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.