போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவருக்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 27). இவர் முடிவைத்தானேந்தலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாராம். அங்கு வந்த முடிவைத்தானேந்தலை சேர்ந்த ராஜா (22), முத்துசெல்வம் (24) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் அவர்கள், சுரேஷ்பாபுவின் கைச்செயினை பறித்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார் கொடுப்பதற்காக சுரேஷ்பாபு நேற்று இரவு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தாராம். அவர் போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த ராஜா, முத்துசெல்வம் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ராஜா, முத்துசெல்வம் ஆகிய 2 பேரும் சேர்ந்து சுரேஷ்பாபுவை அரிவாளால் வெட்டினார்களாம். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க வந்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.