வீடு புகுந்து திருடியவருக்கு தர்ம அடி
திண்டிவனம் அருகே வீடு புகுந்து திருடியவருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனா்.
திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள சிறுநாங்கூர் ராயல் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் சண்முகம் வீட்டில் இருந்து ஒருவர், மூட்டையை எடுத்துச் சென்றார். இதை பார்த்த கிராம மக்கள் சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் 20 கிலோ பித்தளை பாத்திரங்கள் இருந்தது. இதனை சண்முகம் வீட்டில் இருந்து அவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெடுங்குணம் பழங்குடி நகரை சேர்ந்த ரமேஷ்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்தனர்.