கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற நபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
மேல்விஷாரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேல்விஷாரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உண்டியலை உடைத்து திருட முயற்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் அருகே ராஜா (வயது 35) என்பவரது வீடு உள்ளது. இவரின் வீட்டின் வெளிப்புற பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் இரண்டு மணி அளவில் ராஜா தற்செயலாக தனது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை பார்த்துள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து கோவிலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கோவில் கதவை வெளிப்பக்கமாக பூட்டி மஉள்ளனர். பொதுமக்கள் வந்துள்ளதை அறிந்த அந்த நபர் வெளியே தப்பி ஓடி உள்ளார்.
பொதுமக்கள் பிடித்தனர்
அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கோவில் உண்டியலை உடைக்க கொண்டு வந்திருந்த கம்பியால் பிடிக்க வந்தவர்களை தாக்கிவிட்டு, அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அந்த நபர் தாக்கியதில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (54) என்பவர் தலையில் காயம் ஏற்பட்டது. அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிடிப்பட்ட நபரை ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காஞ்சீபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (40) என்பதும், கோவில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருட கம்பி மற்றும் ஆயுதங்களை கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.
இவர் மீது வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவாகி இருப்பதும் போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரவீந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.