தற்காலிக இடத்தில் இயங்கும் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்

தற்காலிக இடத்தில் இயங்கும் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஆலங்காயம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-09-01 17:53 GMT

ஒன்றியக்குழு கூட்டம்

ஆலங்காயம் ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர். அவர்கள் பேசியதாவது:-

வேண்டாமணி:- கடந்த ஒரு ஆண்டாக தெருவிளக்குகள் சரி வர எரிவதில்லை என்று மன்ற கூட்டங்களில் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெயர் பலகை

சதாசிவம்:- அலுவலக நுழைவுவாயிலில் தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கொண்ட பெயர் பலகை வைக்க வேண்டும். வனப்பகுதி வழியாக பஸ் செல்லும் போது இருபுறமும் உள்ள முள் செடிகளால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கங்காதரன்:- வீடு வழங்கும் திட்டத்தில் தீவிர விசாரணை செய்த பின்னர் அதற்கான தொகையை கொடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. வளையாம்பட்டு ஊராட்சியில் பணிகள் சரிவர நடப்பதில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தர கட்டிடம்

வசந்தி:- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தற்காலிக இடத்தில் இயங்கி வருகிறது. அதே இடத்தில் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிகாமணி:- கிராமப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கழிவறைகள் சரியில்லை. இதனால் சிறுநீர் கழிக்க மாணவர்கள் சாலையை கடந்து போக வேண்டிய நிலை உள்ளது. உடனடியாக சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு தேவையான கழிவறை வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரன், சங்கர், காயத்ரிபிரபாகரன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மேலும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்