கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும்
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று கோவையில் அமைச்சர் வி.மெய்யநாதன் கூறினார்.
கோவை
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று கோவையில் அமைச்சர் வி.மெய்யநாதன் கூறினார்.
கார்பன் குறைப்பு கருத்தரங்கம்
கார்பன் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கம் கோவையில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.மெய்யநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது. இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா உள்ளன. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை
கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது. இதனை சரி செய்ய ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடஇலக்கு வைத்துள்ளோம். ராமேசுவரம், ராஜபாளையம் ஆகிய 2 நகராட்சிகளில் கார்பன் பயன்பாட்டை குறைத்து இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கி உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளோம்.
கோவையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறைகளை கையாளுவதால் விரைவில் 2 ஏக்கர் நிலம் மீட்கப்படும். இளைஞர்கள் நீர் நிலைகளை பாதுகாப்பதில் அக்கறையுடன் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த இளைஞர்களை பாராட்ட 100 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.1 கோடி வரை ஊக்கத்தொகை அளிக்க உள்ளோம்.
மஞ்சப்பை திட்டம்
பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற அற்புதமான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை தொடங்கி வைத்து, கார்பன் சமநிலை குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கார்பன் இல்லாத மாவட்டம்
கோவையை 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து துறைகளுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலமாக கோவையில் செங்கல் சூளை பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் இது வரவேற்புக்குரியது.
நாட்டு மரங்களை நடவேண்டும்
வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.மூங்கில், அரசமரம், ஆலமரம், பூவரசமரம் உள்ளிட்ட ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் நாட்டு மரங்களைத்தான் நட வேண்டும். பொள்ளாச்சி கயிறு தொழிற்சாலைகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நினைவுச்சின்னம்
கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலெக்டர் கிராந்திகுமார், பி.ஆர்.நடராஜன் எம்.பி., மேயர் கல்பனா, சுற்றுச்சூழல் துறை இயக்குனர் தீபக் பில்கி, மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.