அரசு பஸ்சில் பயணி 'திடீர்' சாவு
ஸ்ரீவைகுண்டத்தில் அரசு பஸ்சில் பயணித்த பயணி திடீரென இறந்தார்.
ஸ்ரீவைகுண்டம்:
குரும்பூர் இடையன்விளையைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் கிறிஸ்டோபர் (வயது 45). இவருடைய மனைவி பிரின்ஸ். கிறிஸ்டோபர் கடந்த ஒரு வருட காலமாக சிறுநீரக பாதிப்பால் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கிறிஸ்டோபரை அவரது மனைவி பிரின்ஸ் நெல்லை தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக குரும்பூரில் இருந்து அரசு பஸ்சில் அழைத்துச் சென்றுள்ளார். ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் பஸ் வந்தபோது கிறிஸ்டோபருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே பயணிகளுடன் விரைந்து அரசு பஸ்சை ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு டிரைவர் ஓட்டினார். தொடர்ந்து பஸ்சில் இருந்தவர்கள் உதவியுடன் டிரைவர் சீனிவாசகம், கண்டக்டர் துரைராஜ் ஆகியோர் கிறிஸ்டோபரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சில் வந்த நபர் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.