பஸ்சில் பயணம் செய்த பெயிண்டர் சுங்கச்சாவடி தடுப்பில் மோதி பலி
திருவண்ணாமலையில் பஸ்சில் பயணம் செய்த பெயிண்டர் சுங்கச்சாவடி தடுப்பில் மோதி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 45). இவர் பெங்களூருவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு இவர் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் வந்ததார். பின்னர் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை சுமார் 2 மணி அளவில் அரசு பஸ்சில் பெரணம்பாக்கம் நோக்கி சென்றார்.
பஸ்சில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையை அடுத்த இனம்காரியந்தல் அருகில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பஸ் செல்லும் போது படியில் தொங்கிக் கொண்டிருந்த சேட்டு எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.