சேலத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து வடமாநில தொழிலாளி தற்கொலை முயற்சி
சேலத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து வடமாநில தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் பாதையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் மேலே இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஒரு வாலிபர் திடீரென கீழே குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் அவருக்கு கால், இடுப்பு எலும்புகள் முறிந்துள்ளது. மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில், அவரது பெயர் கிருஷ்ணகாந்த் ராய் (வயது 35) என்பதும், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவர் சேலத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் எதற்காக மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.