செயல்படாத மஞ்சப்பை விற்பனை எந்திரம்
பழனியில் மஞ்சப்பை விற்பனை எந்திரம் செயல்படாமல் உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில் மஞ்சப்பை விற்பனை எந்திரம் முக்கிய நகரங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி பஸ்நிலையத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் மஞ்சப்பை விற்பனை எந்திரம் வைக்கப்பட்டது. இந்த எந்திரத்தில் ரூ.10 செலுத்தி மஞ்சப்பையை மக்கள் எடுத்து சென்றனர்.
இந்நிலையில் வைக்கப்பட்ட சில நாட்கள் மஞ்சப்பை விற்பனை எந்திரம் முறையாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது மஞ்சப்பை விற்பனை எந்திரம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. அதேபோல் அதில் முறையாக பைகளும் வைக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் வணிக பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் இந்த எந்திரம் வைத்தால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும். எனவே பழனியை பொறுத்தவரை அதிகமாக வியாபாரம் நடக்கும் அடிவாரம், மார்க்கெட் போன்ற பகுதிகளில் மஞ்சப்பை விற்பனை எந்திரம் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.