திண்டுக்கல்-சென்னை இடையே புதிய ரெயில் சேவை; ரெயில்வே வாரிய உறுப்பினர் தகவல்
திண்டுக்கல்-சென்னை இடையே புதிய ரெயில் சேவை தொடங்க பரிந்துரை செய்யப்படும் என்று ரெயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறினார்.
திண்டுக்கல்-சென்னை இடையே புதிய ரெயில் சேவை தொடங்க பரிந்துரை செய்யப்படும் என்று ரெயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறினார்.
ரெயில் நிலையத்தில் ஆய்வு
இந்திய ரெயில்வே வாரிய பயணிகளின் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கான வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். இதில் நடைமேடைகள், ஓய்வறைகளில் பயணிகளுக்கான இருக்கைகள், குடிநீர், கழிப்பறை ஆகியவை போதிய அளவில் இருக்கிறதா? என்று பார்வையிட்டார். மேலும் டிக்கெட் கவுண்ட்டர், வாகன நிறுத்துமிடம் உள்பட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒருசில குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் ஒருசில நாட்களில் சரிசெய்யப்படும். மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்-சென்னை ரெயில்
இதேபோல் வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் இயக்க பரிந்துரை செய்யப்படும். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ரெயில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், என்ஜினீயர் செந்தில்குமார், வணிக பிரிவு ஆய்வாளர் வீரபெருமாள், சுகாதார ஆய்வாளர் சதீஷ், தெற்கு ரெயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தமிழ்செல்வன், செல்வகணேசன், பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.