கூட்டுக்குடிநீர் திட்டத்தில் புதிய குழாய் அமைக்க வேண்டும்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொள்ளிடம் அருகே அளக்குடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் புதிய குழாய் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-23 18:45 GMT

கொள்ளிடம்:

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொள்ளிடம் அருகே அளக்குடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் புதிய குழாய் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றிய சாதாரண கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். இளநிலை உதவியாளர் சரத்குமார் அறிக்கையை படித்தார். பின்னர் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்

லட்சுமி பாலமுருகன் (தி.மு.க.): மகேந்திர பள்ளி ஊராட்சியில் பவுசுபேட்டை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்.முதலை மேடுகிராமத்தில் மணல் வேளி தெருவில சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். மகேந்திரப்பள்ளி காட்டூர் சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒப்பந்தக்காரர் சரியான அளவில் வீடு கட்டுவதில்லை இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ரீகன் (அ.தி.மு.க.): ஆரப்பள்ளம் ஊராட்சி பாவட்டமேட ுகிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பழைய பாளையம் ஊராட்சி பள்ளிக்கூட தெருவில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கூட்டு குடிநீர் திட்டம்

சிவபாலன் (பா.ம.க.): அளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய குழாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் விவசாயிகள் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

லண்டன் அன்பழகன் (பா.ம.க.): ஓலையம்பத்தூர் ஊராட்சி கார்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குன்னம் கிராமத்தில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

செந்தாமரைக்கண்ணன் (தி.மு.க.): மாதிரவேளூர் ஊராட்சி பாலுரான் படுகை மற்றும் சென்னியநல்லூர் கிராமத்திலும் ஈமகிரியை மண்டபம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உரிய நடவடிக்கை

உறுப்பினரகளின் கேள்விக்கு பதில் அளித்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது.அரசு வீடு கட்டும் திட்டத்தில் மாவட்டத்திலேயே கொள்ளிடம் ஒன்றியம் முதன்மையான நிலையில் இருந்து வருகிறது. பாலூரான்படுகை கிராமத்தில் ஈமச்சடங்கு கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் அவரின் சொந்த இடத்தை இலவசமாக கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.அந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு அதில் உடனடியாக ஈமச்சடங்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில இடங்களில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறுப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன், பலராமன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்