உலர் களமாக மாறிய தேசிய நெடுஞ்சாலை

தானியங்களை உலர வைக்க உலர் களமாக தேசிய நெடுஞ்சாலை மாறியுள்ளது. விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஆகும்.

Update: 2023-10-20 18:45 GMT

சின்னசேலம் ஒன்றியத்தில் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். 4 மாத கால பயிர் என்பதாலும், குறைந்த நீர் பாசனம் போதும் என்பதாலும் மக்காச்சோள பயிரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது ஒருபுறம் மக்காச்சோளபயிர் நடவு செய்யும் பணியும், இன்னொருபுறம் ஏற்கனவே சாகுபடி செய்து விளைச்சல் கண்ட பயிரை அறுவடை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

தற்போது 6 ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகள் மக்காச்சோள பயிரை அறுவடை செய்து பின்னர் எந்திரத்தின் மூலம் பயிரை தனியாக பிாித்தெடுக்கின்றனர். இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பயிரில் உள்ள ஈரப்பதத்தை போக்குவதற்காக அவற்றை உலர வைப்பதற்கு போதிய களம் இல்லை. இதனால் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையை உலா் களமாக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

நிகழும் விபத்துகள்

வாகன போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகள் உலர்களமாக மாறிவருகிறது. இவ்வாறு பயிர்களை சாலையில் உலர வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பயிர்களின் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போது அவை சேதம் அடைந்து பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் அவ்வப்போது சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.

எனவே இதை கருத்தில் கொண்டு பயிர்களை உலர வைப்பதற்காக புதிதாக உலர் களம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் தானியங்களை உலர வைப்பதை தடுக்க வேண்டும் எனவும், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஆகும். நியாயமான 2 கோரிக்கையும் நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

Tags:    

மேலும் செய்திகள்