கொழுகொழு குழந்தைகள் போட்டி

ஏற்காட்டில் கோடைவிழா களைகட்டி உள்ளது. நேற்று கொழுகொழு குழந்தைகள் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாலையில் குளிர்வித்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-05-25 19:58 GMT

ஏற்காடு

ஏற்காட்டில் கோடைவிழா களைகட்டி உள்ளது. நேற்று கொழுகொழு குழந்தைகள் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாலையில் குளிர்வித்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை விழா

ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர்க்கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏற்காடு களை கட்டியது.

கோடை விழாவையொட்டி, நேற்று காலையில் ரெட்ரீட் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டியும், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கொழுகொழு குழந்தைகள் போட்டியும் நடைபெற்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், கலையரங்கத்தில் பல்வேறு இன்னிசை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.

குளிர்வித்த மழை

நேற்று நடந்த போட்டிகளில் முத்தாய்ப்பாக நடைபெற்ற கொழுகொழு குழந்தைகள் போட்டியில் மொத்தம் 25 குழந்தைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பாடப்புத்தகங்களில் உள்ள பாடல்களை பாடும் போட்டிகளும் சிறுவர், சிறுமிகளுக்கு நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோடை விழா களை கட்டி உள்ள நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பகலில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேநேரத்தில் இந்த கோடை மழையின் காரணமாக ஏற்காட்டில் மாலை நேரத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டாறே வாகனங்கள் ஊர்ந்து சென்றதையும் காண முடிந்தது.

மேலும் செய்திகள்