இப்பவோ... எப்பவோ... ஆட்டம் காணும் சிக்னல் கம்பம்
இப்பவோ... எப்பவோ... ஆட்டம் காணும் சிக்னல் கம்பம்
கோவை
கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 50-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சிந்தாமணி சந்திப்பு அருகே ஒரு சிக்னல் இருக்கிறது. இந்த சிக்னல் கம்பம் சாந்த நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கிறது. இதுகுறித்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கோவை-மேட்டுப்பாளையம சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சாய்பாபாகாலனியில் இருந்து புரூக்பாண்ட் சாலைக்கு வரும்போது, சிந்தாமணி அருகே இருக்கும் சிக்னல் கம்பம்தான் சாய்ந்த நிலையில் படுமோசமாக காட்சியளிக்கிறது. காற்று வேகமாக வீசும்போது அது ஆட்டம் காணுவதால் எப்போது வேண்டுமானாலும் சரிந்து கீழே விழலாம். அதில் இருக்கும் விளக்குகளும் ஒளிராது. இதனால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. பின்னர் ஏன் அதை அங்கு வைத்து இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. எனவே இந்த கம்பம் சாய்ந்து உயிர்ப்பலி வாங்குவதற்கு முன்பு அங்கிருந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.