நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் 4 குழந்தைகளை அழைத்து வந்த தாயால் பரபரப்பு

கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கூறி, நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் 4 குழந்தைகளை அழைத்து வந்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-07 20:01 GMT

கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கூறி, நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் 4 குழந்தைகளை அழைத்து வந்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூடங்குளம் அருகே இடிந்தகரையை சேர்ந்த வளன் மனைவி பியோனி தனது 4 மகன்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பியோனியின் கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கேனில் பெட்ரோல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் பியோனியிடம் விசாரித்த போலீசார், அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர்.

கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக...

அதில், ''எனது கணவர் வளன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டார். அங்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், இடிந்தகரை பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு அவர் வெளிநாட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமே கிடைத்த நிலையில், பணியில் இருந்தபோது கணவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் உள்ளார்.

இந்த நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை உடனே திருப்பி செலுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர். நான் 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறேன். கடந்த 6 வருடங்களாக அவர்களுக்கு வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதம் மட்டுமே நான் வட்டியை செலுத்தவில்லை. ஆனால் தற்போது அவர்கள் கந்து வட்டியுடன் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்களது பணத்தை திருப்பிக் கொடுக்க எனது வீட்டை நான் விற்க வேண்டும். அதற்கு 6 மாதம் அவகாசம் அவர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நிவாரணம் வழங்க...

பாளையங்கோட்டையில் மின்சாரம் தாக்கி இறந்த கல்லூரி மாணவர் பாலமூர்த்தியின் பெற்றோர் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ''மின்சாரம் தாக்கி இறந்த பாலமூர்த்தியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மின்சாரம் தாக்கி இறப்பதற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரி மீது மற்றும் வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்