நாகர்கோவில் மாநகர சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க நவீன கருவி; போலீசார் நடவடிக்கை

நாகர்கோவில் மாநகர சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்க நவீன கருவியை வைத்து போலீஸ் கண்காணிக்கிறது.

Update: 2023-09-28 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் மாநகர சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்க நவீன கருவியை வைத்து போலீஸ் கண்காணிக்கிறது.

வேக அளவீட்டு கருவி

நாகர்கோவில் மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வேகமாக செல்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் வடசேரி, ராமன்புதூர், பார்வதிபுரம், செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தும், பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் வேகமாக செல்லும் பலர் போலீசாரிடம் சிக்காமல் தப்பி விடுகிறார்கள்.

இந்தநிலையில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட காவல்துறை சார்பில் ஸ்பீடு ரீடர் (வேகத்தின் அளவீடு)தானியங்கி கருவி ரூ.7 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி வைக்கப்பட்டுள்ள பகுதியில் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டுமோ, அதை விட வேகமாக சென்றால் அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கும் வகையிலான தொழில்நுட்பம் கொண்டது. இதனால் வேகமாக வரும் வாகனங்களை படம் பிடித்து, அதில் உள்ள பதிவெண் மூலம் அபராதம் விதிக்கப்படும்.

தொடக்க விழா- அபராதம்

அதன்படி வாகன வேகத்தை அளவீடு செய்யும் கருவி நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக சந்திப்பில் வைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்கான தொடக்க விழாவில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாநகர பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 30 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்திற்குள் தான் செல்ல வேண்டும். இது அந்தந்த சாலலைகளில் அனுமதிக்கப்படும் வேக அளவு ஆகும். அதை விட வேகமாக செல்லும் வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் ஸ்பீடு ரீடர் கருவியை பல்வேறு இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனைதொடர்ந்து தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் ஸ்பீடு ரீடர் கருவி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தீவிர ரோந்து

மாநகர பகுதியில் திருட்டு, வழிப்பறி மற்றும் நகை பறிப்பு ஆகிய சம்பவங்களை தடுக்க சாதாரண உடையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களிலும் மகளிர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். பஸ்களில் நகை பறிப்பு சம்பவங்களில் வெளி மாவட்ட பெண்கள் கும்பலாக வந்து கைவரிசை காட்டி செல்கின்றனர். இத்தகைய குற்ற சம்பவங்கள் ஒரு மாத காலத்திற்குள் தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், போக்குவரத்து ஒழுங்குப்பிாிவு இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

முக்கிய இடங்களில் வேக அளவீடு பதிவு செய்யும் நவீன கருவி வைக்கப்பட உள்ளதால் யாராக இருந்தாலும் இனி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் அபராதத்தில் இருந்து தப்பிக்க முடியாது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த அளவீடு கருவி செயல்பாட்டுக்கு வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்