மரத்தில் மோதிய மினி வேன்; டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே மரத்தில் மினி வேன் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் கார்த்தி (வயது 35) ஓட்டினார். கிளீனராக நிவாஸ் (16) என்பவர் வந்தார்.
வெள்ளனம்பட்டி அருகே தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் வேன் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த மினி வேன் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மினி வேனில் வந்த டிரைவர் கார்த்தி, நிவாஸ் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.