வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி வேன் எரிந்து சேதம்
வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி வேன் எரிந்து சேதம் அடைந்தது.
ஆரணி
வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி வேன் எரிந்து சேதம் அடைந்தது.
ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). விவசாயி. இவர் தனது மாடுகளுக்கு தேவையான வைக்கோலை சேவூர்- ரகுநாதபுரம் கிராமத்தில் வாங்கி தனது மினிவேனில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை குன்னத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார். கீழ் நகர் அருகே சென்றபோது கொண்டிருக்கும் போது அவ்வழியாக தாழ்வாக சென்ற மின் ஒயரில் வைக்கோல் பாரம் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த வினாடியே வைக்கோல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனடியாக மினிவேனை ஓரங்கட்டியவர்கள் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தண்ணீர் பாய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசம் ஆனதோடு மினிவேனும் சேதம் அடைந்தது.
இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.