கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம்
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் மாவட்டம்தோறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான 'ரெட்ரன்' என்ற தலைப்பில் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நேற்று காலை மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து இந்த மாரத்தானை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான், அரிஸ்டோ ரவுண்டானா, மன்னார்புரம் ரவுண்டானா, டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக அண்ணா ஸ்டேடியத்தில் முடிவடைந்தது. இதில் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் மாணவர் கார்த்திக் முதலிடத்தையும், 2-வது இடத்தை தரகநாத்தும், 3-வது இடத்தை அவினேசும் பெற்றனர். பெண்கள் பிரிவில் கீதாஞ்சலி முதலிடத்தையும், சுவாதி 2-வது இடத்தையும், சதா 3-வது இடத்தையும் தட்டிச் சென்றனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே 10,000, 7,000, மற்றும் 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.