பிச்சை எடுத்து நிதி திரட்டிய வியாபாரி
சேதம் அடைந்த சாலையை சீரமைக்க தேனி கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுத்து நிதி திரட்டிய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
பிச்சை எடுத்த வியாபாரி
தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஊரில் பெட்டிக்கடை நடத்தி வரும் கேரளபுத்திரன் என்பவர் தங்கள் ஊருக்கு சாலை அமைக்கும் வரை தான் தாடியை எடுக்காமல் உலா வருவேன் என்று கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நூதன மனு கொடுத்தார்.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கேரளபுத்திரன் நேற்று மீண்டும் வந்தார். அவர் தனது கையில் பழைய ஹெல்மெட்டை திருவோடு போன்று தூக்கி வந்தார். அங்கு அவர் தங்கள் ஊரின் சாலையை சீரமைக்க பிச்சை எடுத்து நிதி திரட்டுவதாக கூறி மக்களிடம் நிதி கேட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
சாலை சீரமைக்க நிதி
அப்போது அவர் கூறும்போது, "எங்கள் ஊருக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளதால் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். நிதி பற்றாக்குறையால் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே, என்னால் முடிந்த அளவுக்கு நிதி திரட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஊரிலும், கலெக்டர் அலுவலகம் வரும் வழியிலும் கோரிக்கை மனுவின் நகலை கொடுத்து நிதி கேட்டேன். பலர் பணம் கொடுத்தனர். அந்த பணத்தை கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றார்.
ஆனால், அவரை கலெக்டரை சந்திக்க விடாமல் போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பினர். அப்போது அவர் மக்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்ததில் சுமார் ரூ.1,700 கிடைத்துள்ளதால் அதை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் கூறினார். போலீசார் அதை ஏற்கவில்லை. இதனால், அவர் அந்த பணத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புவேன் என்று கூறி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.