கருணாநிதிக்கு வேறு இடத்தில் கட்சி பணத்தில் நினைவு சின்னம் அமைக்கலாம்-டிடிவி தினகரன்
கருணாநிதிக்கு வேறு இடத்தில் சொந்த கட்சி நிதியில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோரின் எண்ணமாக உள்ளது என்று டிடிவி தினகரன் கூறினார்.
குன்னூர்
நீலகிரி மாவட்ட அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கலைச்செல்வனின் தந்தை சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குன்னூர் அருகே உள்ள கரன்சி கிராமத்திற்கு வந்தார். பின்னர் கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் கலைச்செல்வனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதி நினைவாக பேனா சின்னம் வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு தற்போது நிதி நிலைமையில் தத்தளித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் தி.மு.க. மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மக்கள் வரி பணத்தில் கடலில் பேனா சின்னம் அமைப்பது சுற்று சூழலை பாதிக்கும். இதனை மீனவர்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருணாநிதிக்கு வேறு இடத்தில் சொந்த கட்சி நிதியில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோரின் எண்ணமாக உள்ளது. அதை புரிந்து கொண்டு ஸ்டாலின் செயல்படவேண்டும் அது தான் தமிழ்நாட்டிற்கும் நல்லது அவருக்கும் நல்லது.
அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றி வருகிற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை தர மறுத்த காரணத்தால் நாங்கள் போட்டியிடவில்லை'இவ்வாறு அவர் கூறினார்.