குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்சியில் குழு
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்சியில் குழு அமைக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.
கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு
திருச்சி காந்தி மார்க்கெட் முருகன் தியேட்டர் அருகில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லத்தை மாவட்ட நிர்வாகம் சரியாக பராமரித்து வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பான முறையில் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். இங்கிருக்கும் சிறுவர்களை நேரில் சந்தித்து விசாரித்தபோது எந்த குறைகளும் இல்லை என்று தெரிவித்தனர். இந்த கூர்நோக்கு இல்லத்தில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி என நான்கு மாவட்டங்களில் உள்ள சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு இடம் பற்றாக்குறை இருப்பதால், அதனை விரிவு செய்வதற்கான நடவடிக்கையில் மாவட்ட கலெக்டர் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
அதிக விழிப்புணர்வு
தொடர்ந்து தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் வரும் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் 21 கூர்நோக்கு இல்லங்களை தேர்வு செய்து அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும் செயலி மூலமாக இந்தியா முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களை கண்காணித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளோம். நாளை(இன்று) நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம்.
குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குகளை பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் தான் அதிக குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு செயலில் ஈடுபடும் அனைத்து துறைகள் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்சியில் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காந்தி மார்க்கெட் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசீலன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.