நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை

நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-26 22:47 GMT

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகர் 10-வது தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், அதே தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 25) என்பதும், அவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த கொலை குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல்

கொலையான வெங்கடேசன், அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ்குமார் (24), தினேஷ் (24) மற்றும் கரண் ஆகிய 4 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

இதற்கிடையில் நரேஷ்குமாரின் மனைவிக்கும், வெங்கடேசனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையறிந்த நரேஷ்குமார், தனது மனைவி மற்றும் வெங்கடேசனை கண்டித்தார். அதன்பிறகு நரேஷ்குமார், தினேஷ், கரண் ஆகிய 3 பேரும் வெங்கடேசன் உடனான நட்பை முறித்துக்கொண்டனர்.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த வெங்கடேசனை தீர்த்துக்கட்ட நரேஷ்குமார் முடிவு செய்தார். இதற்காக கடந்த ஒரு வாரமாக நண்பர்கள் 3 பேரும் மீண்டும் வெங்கடேசன் உடன் நட்பாக பழகினர்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 4 பேரும் பெருமாள் நகர் 10-வது தெருவில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து வெங்கடேசனை அரிவாளால் சரமாரியாக தலைப்பகுதியில் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று தினேஷ் மற்றும் நரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கரணை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்