கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய கொத்தனார்
குழாய் பதிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட கொத்தனாரை தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர்.
குழாய் பதிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட கொத்தனாரை தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர்.
சுவர் இடிந்தது
சிவகங்கையில் மதுரை முக்கு ரோட்டில் வசிப்பவர் வடிவேல். இவர் அங்கு புதிதாக வீடு கட்டியுள்ளார். இவரது வீட்டிலிருந்து பிரதான சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் சேர்க்கும் வகையில் கழிவுநீர் குழாய் பதித்தார். இந்த பணியில் பனையூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் முத்து (வயது 36), வேம்பத்தூர் கிராமத்தை சேர்ந்த சித்தாள் ஒச்சக்காள் (45) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
இதையொட்டி அவர்கள் புதிய வீட்டில் இருந்து மேலரத வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய சந்தின் வழியாக குழாய்களை பதித்து கொண்டிருந்தனர். வாய்க்கால் அருகில் அவர்கள் குழாய் பதித்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த பழமையான சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
போராடி மீட்பு
அப்போது சுவரின் இடுபாடுகளுக்குள் கொத்தனார் முத்துவின் ஒரு கால் சிக்கி கொண்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வநது அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய முத்துவை அரை மணி நேரம் போராடி மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
போலீசார் விசாரணை
மேலும் சம்பவ இடத்தை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய்சவுந்தர்யன், நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.