கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-18 19:32 GMT

பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை வழக்கில் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருடைய மகன் தேவேந்திரன்(வயது 33). விவசாய தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை வழக்கில் தேவேந்திரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்த இவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஊருக்கு வந்த அவரிடம் யாரும் சரியான முறையில் நெருங்கி பழகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்தவர் சம்பவத்தன்று வீட்டு உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவருடைய மனைவி ரமிலா, பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்