சிறைக்குள் தலையை துண்டித்து ரவுடியை கொன்ற வழக்கில் 27 வருடம் தலைமறைவாக இருந்தவர் கைது

பிரபல ரவுடி லிங்கம் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-18 23:54 GMT

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே நாச்சியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவருக்கும், மற்றொரு தரப்பு ரவுடியான பிரபு என்பவருக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருதரப்பை சேர்ந்த சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே போலீசார் ஒரு வழக்கில் ரவுடி லிங்கத்தை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர். 1996-ம் ஆண்டு லிங்கம் இருந்த சிறைக்குள் ஒரு கும்பல் புகுந்து அவரை கொடூரமாக கொன்றது. அங்கு அவருடைய தலையை மட்டும் துண்டித்து நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலைய பகுதியில் வைத்து விட்டு தப்பினர்.

சிறைக்குள் புகுந்து தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

27 ஆண்டுகளாக தலைமறைவு

இந்த கொலை வழக்கில் மொத்தம் 36 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் நாகர்கோவில் புதுக்குடியிருப்பு மேல காமராஜர்புரத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 55) என்பவரும் ஒருவர். இவர் இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அதன்பிறகு அவர் போலீசாரின் கண்ணில் சிக்கவில்லை. இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பும் கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் செல்வம் மட்டும் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல், கடந்த 27 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். அதனால் பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டு இருந்தது.

இவர் மீது வடசேரி போலீஸ் நிலையத்திலும் சில வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளிலும் செல்வம் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்ட செல்வம் சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. உடனே தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விரைந்தனர்.

சிறையில் அடைப்பு

இங்கு பூந்தமல்லி பகுதியில் பதுங்கியிருந்த செல்வத்தை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் பிடிபட்ட செல்வம் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. பின்னர் செல்வத்தை நேற்று காலை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்