16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
வழிப்பறி, திருட்டு வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூர் மாவட்டம் முத்துவீரன் கிராமம் கண்டிவீரன்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்த அன்பழகன் (வயது 45), மாரியப்பன், மூர்த்தி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். கடந்த 2007-ம் ஆண்டு 3 பேரும் பிணையாணையில் வெளியே வந்து, தலைமறைவாகினர்.
இந்த நிலையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் உத்தரவின்பேரில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 3 பேரையும் தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் அவர்கள் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, அன்பழகனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட அன்பழகன் தென்காசி உதவி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.