கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
முன்னீர்பள்ளம் அருகே கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னீர்பள்ளம்:
முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைகுளம், சர்ச் தெருவை சேர்ந்தவர் டேவிட் ஸ்டீபன் (வயது 61). இவர் கடந்த 2007-ம் ஆண்டு அந்தப் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை 2010-ம் ஆண்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தபோது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அந்த வழக்கில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளிவந்தார். அதன் பிறகு கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி, முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீசார் டேவிட் ஸ்டீபனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.