தூத்துக்குடியில் சாலையோரம் படுத்து தூங்கியவர் கொலை

தூத்துக்குடியில் சாலையோரம் படுத்து தூங்கியவரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-08 18:45 GMT

தூத்துக்குடியில் சாலையோரம் படுத்து தூங்கியவரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சாலையோரம் தூங்கியவர் கொலை

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் அருகில் நேற்று முன்தினம் இரவில் சாலையோரம் தூங்கிய 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் ராபி சுஜின் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இறந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு...

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த அகமது (வயது 50) என்பது தெரிய வந்தது. கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட இவர், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள தனது தங்கையின் வீடு அருகில் சுற்றி திரிந்துள்ளார்.

இதேபோன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தை பூர்வீகமாக கொண்டவரும், காயல்பட்டினத்தில் வசித்தவருமான இப்ராஹிம் (35) என்பவரும் அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டு திரேஸ்புரம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.

கைது

மனநலம் பாதிப்புக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இப்ராஹிம், நல்ல நிலையில் இருக்கும்போது அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவில் சாலையோரம் தூங்கிய அகமதுவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து இப்ராஹிமை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்